^ Back to Top
Updated July 7th, 2010, 07:34 AM IST
Updates

Arulmigu anjali varatha AAnjaneyar Temple

Posted on July 7th, 2010 at 07:34 AM.

மூலவர் : அஞ்சலி வரத ஆஞ்சநேயர்
பழமை : 500 வருடங்களுக்கு முன்
ஊர் : மேட்டுப்பட்டி[Metupatti]. சின்னாளபட்டி [Chinaalapatti],
மாவட்டம் : திண்டுக்கல் [Dindigul]
மாநிலம் : தமிழ்நாடு [Tamil Nadu]

திருவிழா: சித்திரை மாதப்பிறப்பன்று பத்தாயிரம் கனி அலங்காரம், புரட்டாசி சனிக்கிழமைகளில் முதலாவது சனியன்று ராஜ அலங்காரம் (பேண்ட், சர்ட் அணிந்த அலங்காரம்), இரண்டாவது சனியன்று செந்தூர அலங்காரம், மூன்றாவது சனியன்று பச்சை அலங்காரம், 4வது சனியன்று சஞ்சீவிமலையை தூக்கிய அலங்காரம், 5வது சனியன்று பத்மாசனத்தில் தியான அலங்காரம் ஆகியவை செய்யப்படும். தை மாதப்பிறப்பன்று 5008 கரும்பு அலங்காரத்தில் காட்சி தருவார். ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம் உண்டு. இதுதவிர ஒவ்வொரு வார சனிக்கிழமையும் விசேஷ அலங்காரம் உண்டு. ஆஞ்ச நேயருக்குரிய மூல நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் உண்டு. இங்கு ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் வருஷாபிஷேகம் நடக்கும். அப்போது பஞ்சசூக்தி ஹோமம், சுதர்சன ஹோமம், அனுமசகஸ்ர நாமாவளி யாகம் ஆகியவை செய்யப்படும். தொடர்ந்து வரும் மூல நட்சத்திரத்தன்று 508லிட்டர் பாலாபிஷேகம், 108 கலசாபிஷேகம், 7 வருணாபிஷேகம் ஆகியவை நடைபெறும். அடுத்த நாள் மகாபாரத காலத்தில் பீமனுடன் வாதம் புரிந்த வயோதிக ஆஞ்சநேயர் அலங்காரமும், அதையடுத்து கருடர், வராகர், நரசிம்மர், ஹயக்கிரீவர் மற்றும் ஆஞ்சநேயரின் வடிவம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயராகவும் காட்சி தருவார்.

தல சிறப்பு: சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தால் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 16 அடி உயரம் கொண்டவர்..

திறக்கும் நேரம்:காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர், சின்னாளபட்டி- 624301. திண்டுக்கல் மாவட்டம்

போன்: +91 – 451-245 2477, 94432 26861

பொது தகவல்: கோயிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்களால் எழுதப்பெற்ற 1 கோடி ராமநாமஜெபம் சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சுற்றி வந்தால் சுந்தரகாண்டத்தையே பாராயணம் செய்த பலனும், ராமநாமஜெபத்தை 1 கோடி தடவை உச்சரித்த பலனும் கிடைக்கிறது என்பது நம்பிக்கை.இத்தலத்தில் ஆஞ்சநேயர் ராஜாவாக விளங்குவதால் மகாமண்டபத்தில் அவரது பரிவாரங்களான நளன், நீளன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவந்தன், ஜிதன், ஜுவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகள் அமைந்துள்ளது தலத்தின் சிறப்பாகும்.கோயிலின் சுற்றுப்பகுதியில் செல்வத்தின் அதிபதி லட்சுமியும், கல்விக்கதிபதி சரஸ்வதியும் அருள்பாலிக்கிறார்கள். ராமர், சீதா, லட்சுமணர் சிலைகளும் சன்னிதானத்தில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்தக் கோயில்.

பிரார்த்தனை: பக்தர்கள் தாங்கள் என்ன வேண்டினாலும் இந்த அனுமான் நிறைவேற்றித்தருவதாக கூறுகிறார்கள்.

தங்களின் நியாயமான வேண்டுதல் நிறைவேற வெண்ணெய் காப்பு சாற்றுதல், பட்டு சாற்றுதல், பழ அலங்காரம் செய்தல், வெற்றிலை மாலை, வடைமாலை சாற்றி வழிபடுதல் என வேண்டிக்கொள்கிறார்கள்.

சனிப்பெயர்ச்சி காலங்களில் இவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷ பாதிப்பு குறையும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

நேர்த்திக்கடன்: ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை: அனுமனை வணங்குபவர்களை சனிபகவானும் அண்டமாட்டான் என்பது நம்பிக்கை. “”ஓ ராமா! உன் நாமாவையோ, இந்த அனுமன் நாமாவையோ யார் கூறுகிறார்களோ, அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன்,” என்று ராமனிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவர்.ராமாயண கதாநாயகன் ராமனின் வலதுகரமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமனை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. வாயுபகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்ற பெயர்களும் உண்டு.ராமநாமத்தை தவிர வேறு எதையும் அறியாத அவர் தன் னலமில்லாத வீரனாக திகழ்ந் தார். அவர் மிகச்சிறந்த ராம பக்தன். ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே வாழ்ந்தவர். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தவர். எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. பிறரால் செய்யமுடியாத செயல்களை இவர் ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே செய்து முடித்தவர். சாதாரண செயல்களை செய்து விட்டு தங்களை தாங்களே தற்பெருமையாக புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் தன் அறிவைப் பற்றியோ, தனது தொண்டைப் பற்றியோ பிறரிடம் கூறியது கிடையாது. அத்துடன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொன்னதும் கிடையாது.

“”நான் ராமனின் சாதாரண தூதன், அவரது பணியை செய்வதற்காகவே வந்துள் ளேன். எனக்கு ராமனின் அருளால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும் போது நான் மரணமடைய நேரிட்டால் அதை வரவேற்கிறேன்” என்று சொன்னவர்.வணங்குபவர் களுக்கு வணக்கம் சொல்லும் ஆண்டவனான ஆஞ்சநேயர் தமிழகத்தில் ஐந்து இடங்களில் அஞ்சலி ஹஸ்த நிலையில் விஸ்வரூபத்தில் அருள்பாலிக்கிறார். “அஞ்சலி ஹஸ்தம்’ என்றால் “வணங்கிய நிலை’ என்பதாகும். இதில் மிகவும் பழமையானது சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர். நாமக்கல் லில் ஒரு ஆஞ்சநேயரும், சென்னை நங்கநல்லூரில் ஒரு ஆஞ்சநேயரும், தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரத்தில் 77 அடி உயரத்தில் தமிழகத்தின் மிக உயரமான ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். ஆனால் சின்னாளபட்டி ஆஞ்சநேயர் நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் ஆனவர் என் பது குறிப்பிடத்தக்கது.

“அழகான ஆஞ்சநேயர்’, “சுந்தர புருஷன்’ என்று பக்தர்களால் அன்பாக அழைக்கப்படும் அளவுக்கு இந்த 16 அடி உயர ஆஞ்சநேயரின் புகழ் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கிறது. ஆஞ்சநேயர்களில் கதாயுதத்துடன் இருப்பவர் இவர் ஒருவர் மட்டுமே. சமீப காலத்தில் உருவான இந்தக் கோயில், அவரது விஸ்வரூபம் போல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரைவிலேயே பிரபலமாகி விட்டது.

இங்கு ஆஞ்சநேயர் அஞ்சலிஹஸ்த நிலையில் கதாயுதத்துடன் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும்.இவரது வலது கண் சூரியன். இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போல வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.சிவனைப்போல் ஜடாமுடி என அருள்பாலிக்கும் இவரைப் பார்த்தால் அவரும் நாமும் பேசிக் கொண்டிருப்பதுபோல் தோன்றும். இவரை வணங்கினால் ஆயுள் விருத்தி, சகல செல்வம், கல்வி ஞானம் சிறக்கும். இவரது வால் பாதத்தை நோக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட தரிசனம் காண்பவர்கள் திருமணபாக்கியம், உத்தியோகஉயர்வு, புத்திர பாக்கியம், கிரக தோஷங்களின் நிவர்த்தி, கோர்ட் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்,” என்கிறார்.

தல வரலாறு: ராமாயண காலத்தில் அனுமனின் பாதம் இத்தலத்தில் பதிந்ததாகவும், அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து செல்லும் போது அதிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோயிலின் எதிரில் உள்ள சிறுமலை என்றும் கூறுவதுண்டு.ஒரு முறை கனகராஜ் என்பவரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, தான் இவ்விடத்தில் தியான கோலத்தில் வீற்றிருப்பதாகவும் எனவே இங்கு கோயில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். அதன்பிறகே இந்த கோயில் கட்டப்பட்டது.

இருப்பிடம் : மதுரையிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் உள்ள சின்னாளபட்டியிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ள மேட்டுப் பட்டியில் கோயில் அமைந்துள்ளது. திண்டுக்கல், செம்பட்டியிலிருந்து பஸ் வசதி உள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் : அம்பாத்துரை.

அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை

தங்கும் வசதி : திண்டுக்கல்

ஹோட்டல் பார்சன் கோர்ட்
போன்: +91 – 451 – 645 1111

ஹோட்டல் மகா ஜோதி
போன்: +91 – 451 -243 4313

ஹோட்டல் கோமத் டவர்ஸ்
போன்: +91 – 451 – 243 0042

ஹோட்டல் வேல்ஸ் பார்க்
போன்: +91 – 451 – 242 0943

ஹோட்டல் செந்தில் ரெசிடென்ஸி
போன்: +91 – 451 – 645 1331

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
Filed Under Oddanchatram Special | By

About Special Reporter

Registered author since 2010-06-06 00:47:37 Follow :

Comment

Quick Links