^ Back to Top
Updated October 11th, 2013, 11:07 AM IST
Updates

ஒரு ஏக்கர்… 30 ஆண்டுகள்… 90 லட்சம்!

Posted on September 30th, 2013 at 12:42 AM and last modified on October 11th, 2013 at 11:07 am.

‘வேங்கை, ஓங்கி வளரும்’ என்பது நம் முன்னோர்களின் சொல்லாடல். தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் முதன்மையானது, வேங்கை. கோயில்களில் தல விருட்சமாக வேங்கை மரங்களே அதிகம் இருக்கும். படர்ந்து விரிந்து, குளுமையான நிழலைத் தரக்கூடிய வேங்கை, வெயில் காலங்களில் உஷ்ணத்தை உள்வாங்கி கொள்ளும் தன்மை கொண்டது. இதன் பட்டை, இலை அனைத்துமே மகத்தான மருத்துவ குணம் மிக்கவை.

தற்போது கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் இந்த மரங்களைக் காண்பது அரிதாகிவிட்டது. இன்றைய தலைமுறையினர், வேங்கையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். விவசாயத் தோட்டங்களிலும்கூட, குமிழ், தேக்கு, ரோஸ்வுட் உள்ளிட்ட மரங்கள்தான் அதிகம் வளர்க்கப்படுகின்றன. என்றாலும், அதனருமையை உணர்ந்த சிலர் மட்டுமே, வேங்கையைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வளர்த்தெடுக்கிறார்கள், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலூகா, வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் போல!

சண்முகசுந்தரத்தின் வீட்டுத் தோட்டத்தில் வேங்கை மரங்கள் பிரமாண்டமாகக் காட்சி அளிக்கின்றன. ”வெளியில எவ்வளவு வெக்கையா இருந்துச்சு பார்த்தீங்களா… ஆனா, இங்க ஏதோ காட்டுக்குள்ள வந்த மாதிரி ‘குளுகுளு’னு இருக்கு பாருங்க. இதுதான் வேங்கையோட மகிமை. இந்த மரங்கள் நம்ம உடல் ஆரோக்கியத்துக்கு பல வகைகள்ல ஒத்தாசையா இருக்கு. வேங்கை மரப் பட்டையில் உள்ள ‘டிரோசிலிபின்’ (pterosylebene) வேதிப்பொருள் சர்க்கரை நோயை குணப்படுத்தக் கூடியதுனு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உறுதிபடுத்தியிருக்கு” என்று வேங்கையின் பெருமை பேசியவர், தொடர்ந்தார்.

30 அடி இடைவெளி அவசியம்!

”இது களியும், மணலும் கலந்த 40 சென்ட் நிலம். 30 தென்னையும், வேலி ஓரத்துல 10 வேங்கை மரங்களும் இருக்கு. முப்பது வருஷத்துக்கு முன்ன… இது வாழைத் தோட்டமா இருந்தப்போ, வேலி ஓரத்துல

15 அடி இடைவெளியில 10 வேங்கை கன்னுங்கள நடவு செஞ்சோம். வாழைக்கு வாரம் ஒரு தடவை தண்ணீர் பாய்ச்சினதுனால, வேங்கையும் நல்லா செழிப்பா வளர ஆரம்பிச்சுது. வாழையை எடுத்த பிறகு, தென்னையை நடவு செஞ்சோம். ஒரு கட்டத்துக்குப் பிறகு, போதுமான சூரிய ஒளி கிடைக்காம, ஒரு மரம் விட்டு ஒரு மரம்தான் நல்லா பருமனா பெருத்துச்சு. சூரிய ஒளி தாராளமா கிடைச்ச மரங்கள் மட்டுமே தரமா வளர்ந்துச்சு. தலா 30 அடி இடைவெளி இருந்திருந்தா, சூரிய ஒளியும், மண்ணுல உள்ள சத்துக்களும் சரியான விகிதத்துல எல்லா வேங்கை மரங்களுக்குமே கிடைச்சு, எல்லா மரமும் நல்லா வளர்ந்திருக்கும்.

வேங்கைக்கு 5 அடி தூரத்துல இருந்த தென்னை மரங்கள் நல்லா காய்க்கல. 20 அடி தூரத்துல இருந்த மரங்கள் நல்லா காய்ச்சிருக்கு. சூரிய ஒளி கிடைச்ச 5 மரங்களும் 10 அடி சுற்றளவுக்கு 65 அடி உயரத்துல பிரமாண்டமா காட்சி அளிக்குது. சுமார் 25 அடி உயரம் வரைக்கும் பக்கக் கிளைகளே இல்லாம, உருட்டு மரமாகவே வளர்ந்திருக்கு. ஒரு மரத்துல இருந்து, கிட்டத்தட்ட 200 கன அடியில இருந்து 250 கன அடி வரைக்கும் கட்டைகள் கிடைக்கும்” என்று எதிர்பார்ப்போடு சொன்ன சண்முகசுந்தரம்,

”வேங்கை நடவு செய்த 2 ஆண்டுகள் வரை ஊடுபயிரா சவுக்கு அல்லது வாழை சாகுபடி செய்யலாம். 5 ஆண்டுகள் வரை கடலை, உளுந்து, எள், மக்காச்சோளம், காய்கறினு சாகுபடி செய்யலாம்” என்றும் அனுபவ ஆலோசனைகளைத் தந்தார்.  

இடைவெளியில் இருக்கு ரகசியம்!

இதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி, 60 சென்ட் நிலத்தில் வேங்கை சாகுபடி செய்துள்ளார். ”10 அடி இடைவெளி கொடுத்து, 102 கன்னுகளை நடவு செஞ்சேன். இதுல 98 கன்னு நல்லா பொழைச்சு வந்துடுச்சு. இப்ப இந்த மரங்களுக்கு எட்டு வயசாகுது. ஒவ்வொரு மரமும் 10 அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கு. ஆனா, மரம் பெருக்கல. இடைவெளி தாராளமா இருந்திருந்தா, மரம் திரட்சியா வளர்ந்திருக்கும்” என்று சொன்னார்.

வறண்ட நிலத்தில் வளராது!

மரம் வளர்ப்பில் நீண்ட அனுபவம் உள்ள தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், வேங்கை பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

”வேங்கையை தனித் தோப்பாக சாகுபடி செய்வதாக இருந்தால், தலா 30 அடி இடைவெளி அவசியம். ஒரு ஏக்கருக்கு 45 முதல் 50 மரங்கள் வரை வளர்க்கலாம். இதற்கு வடிகால் வசதியுடைய மேட்டுப்பாங்கான நிலம் தேவை. வண்டல் கலந்த களிமண், வண்டல் கலந்த செம்மண் நிலத்தில் வேங்கை செழிப்பாக வளரும். இரண்டு கன அடி குழி எடுத்து, அடியுரமாக ஒரு குழிக்கு 5 கிலோ மாட்டு எரு போட்டு நடவு செய்து, முறையாக தண்ணீர் பாய்ச்சினால், மரம் தரமாக வளரும். வேங்கை வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், அது உண்மையல்ல… வறட்சிக் காலங்களிலும் பட்டுப் போகாமல் உயிரோடு இருக்கும். நன்கு திரட்சியான, நீண்ட உயரத்துக்கு பருமனாக பெருத்த, வைரம் பாய்ந்த மரங்களாக உருவாக, மண்ணில் நீர்ச்சத்து அவசியம் தேவை. நீர்வளம் இல்லாத நிலத்தில் வளர்ந்த வேங்கை மரங்கள் தரமானதாக இருக்காது. அதுபோன்ற மரங்கள் மிகவும் குறைவான விலைக்குதான் விற்பனையாகும். அதனால், இதனை மானாவாரி நிலங்களில் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.  

ஒரு கன அடி 1,500 ரூபாய்!

நடவு செய்த முதல் 6 மாதங்கள் வரை, வாரம் இரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு வாரம் ஒரு முறையும் அதன் பிறகு மாதத்துக்கு இரு முறையும் தண்ணீர் கொடுக்க வேண்டும். பெரிய மரங்களாக வளர்ந்த பிறகும் கூட, மாதம் இருமுறை தண்ணீர் கொடுக்க வேண்டும். நடவு செய்த 2-ம் ஆண்டிலிருந்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பக்கக் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதில் கிடைக்கும் கிளைகளை வாழை சாகுபடியில் முட்டுக் கால்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

10 ஆண்டுகளில் 15 அடி உயரம், 3 அடி சுற்றளவு என்று இந்த மரங்கள் வளர்ந்திருக்கும். அதன் பிறகு வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். 25 முதல் 30 ஆண்டுகளில் மரத்தில் வைரம் பாய்ந்திருக்கும். இதுபோன்ற தரமான மரங்களில் இருந்து, 200 கன அடி கட்டை கிடைக்கும். ஒரு கன அடி குறைந்தபட்சம் 1,500 ரூபாய்க்கு விலை போகும். தரமான மரங்களில் இருந்து கிடைக்கும் கிளைகளையும் மரச்சாமான்கள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். ஆனால், இந்தக் கிளைகளுக்காக, வியாபாரிகள் பணம் தருவதில்லை. வெட்டுக் கூலி, போக்குவரத்துச் செலவுகளுக்கு ஈடாக இவற்றை எடுத்துக் கொள்வார்கள்” என்ற பாலசுப்ரமணியன், நிறைவாக,

30 ஆண்டுகளில் 200 கன அடி!

”விலை விஷயத்தில் பெரும்பாலும் விவசாயிகள் ஏமாந்து விடுகிறார்கள். 200 கன அடி உள்ள ஒரு மரத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே வியாபாரிகள் தருகிறார்கள். விவசாயிகளும் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. வந்த வரைக்கும் லாபம் என நினைக்கிறார்கள். ஆனால், ஒரு கன அடி 1,500 ரூபாய் என்னும் போது 200 கன அடிக்கு மூன்று லட்ச ரூபாய் வருகிறது. குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாயாவது கிடைக்கும். உத்தேசமாக ஒரு ஏக்கர் நிலத்தில் 45 மரங்கள் சாகுபடி செய்து, அவற்றை தரமாக வளர்த்தால், 30 ஆண்டுகளில் 90 லட்சம் ரூபாய்க்குக் குறையாமல் கிடைக்கும்.

45 மரங்களை நட்டு, 30 ஆண்டுகள் பராமரிக்க, அதிகபட்சமாக நாலரை லட்சம் ரூபாய் வரை செலவானாலும், மீதி பணம் முழுக்க லாபம்தான். எனவே, வளர்ந்த மரங்களை நன்கு விசாரித்து, அதன் பிறகே விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி முடித்தார்.

தொடர்புக்கு,

சண்முகசுந்தரம், செல்போன்: 98849-04439

பாலசுப்ரமணியன்: 94864-08384

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
Filed Under Agriculture Tips | By

About Vijayakumar Selvaraj

Registered author since 2010-10-14 08:29:53 Follow :

Vijay, a Computer Science graduate and self-proclaimed PHP geek, is passionate about building effective and stunning websites. He hails from K.Keeranur village and owns Oddanchatram.in, a popular portal dedicated to his hometown Oddanchatram in Dindigul district. He is also interested in handling web development sessions, loves to work with NGOs and support them through social media marketing.

Comment

Quick Links